இலங்கையில் மீண்டும் பெட்ரோல் விலை குறைப்பு: லிட்டருக்கு ரூ.40
18 Oct,2022
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.370க்கு விற்பனையாகிறது. கொழும்பு, கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதாரம் முன்னோடியில்லாத வகையில் இந்த ஆண்டு 9.2 சதவீதம் சுருங்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இலங்கையின் வருடாந்திர பணவீக்க விகிதம் 70 சதவீதத்தை
நெருங்கியுள்ளது. எனினும், எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைத்துள்ளது. அவ்வப்போது விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில், விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. தொடர்ந்து 2 வார காலத்தில் மீண்டும் 2வது
முறையாக விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.40 குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் ரூ.370க்கு விற்பனையாகிறது. 92 ரக பெட்ரோல் விலை ரூ.40 குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.370 க்கு விற்பனையாகிறது. ஆட்டோ டீசல் விலை ரூ.15 குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.415 க்கு விற்பனையாகிறது. மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும். இந்த நிலையில் டீசல் பற்றாக்குறையால் பொது போக்குவரத்தும் முடங்கியது. ஆனால் இப்போது பொது போக்குவரத்து சேவைகள் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன.