இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளிநாட்டு கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் தற்போது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.
இலங்கை பெருமளவிலான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுல்ளதால் அது பற்றியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் சீன நிதி அமைச்சருடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய பிரதான மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், இந்த பேச்சுவார்த்தைகளை நேற்று முன்தினம் (15) ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
சியம்பலாண்டுவ பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு கருத்துரைத்த போதே இந்த விடயங்களை தெளிவூட்டியிருந்தார்.
விவாதம் செய்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வீதிக்கு வந்து இரத்தம் சிந்தப் போவதாக சிலர் கூறியதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டிய ஜனாதிபதி, இரத்தம் சிந்துவதற்கு முன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
வாஷிங்டன் பேச்சுவார்த்தை
இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்கவிற்கும், பெரிஸ் சங்கத்தின் இணை தலைவர் வில்லியம் ருஸ்ஸிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத் தொடரின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடன் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயார் என வில்லியம் ருஸ், தெரிவித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கடனை உரிய வகையில் செலுத்துமாறு வங்கதேசம் தெரிவிப்பு
இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை உரிய நேரத்தில் இலங்கை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது.
வங்கதேசம் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர், அந்த நாட்டு ஊடகமொன்றிற்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலேயே, இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும், பங்களதேஷ் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கதேசத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை, உரிய நேரத்தில் இலங்கையினால் வழங்க முடியவில்லை.
இந்த நிலையில், குறித்த கடனை செலுத்தும் கால எல்லையை வங்கதேசம் நீடிப்பதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்த கடனை செலுத்துவதற்கு இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கை உரிய நேரத்தில் கடனை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேச மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பொருளியல் நிபுணரின் பார்வை
சீனா, கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
''ஜெனீவாவில் இலங்கையின் பொருளாதார பிரச்னை தொடர்பில் இம்முறை பேசப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச ரீதியாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டு, அதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளமையினால், அதற்கு சீனாவும் ஆதரவு தெரிவிக்கும். கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதையே இலங்கை எதிர்பார்க்கின்றது. அது பெரும்பாலும் சாத்தியமாகும். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கைக்கு அமைய, சீனா இதற்கு இணக்கம் தெரிவிக்கும். அதில் பிரச்னை ஏற்படாது." என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள கடனை அடிப்படையாகக் கொண்டே, வங்கதேசம் தமது கடனை உரிய நேரத்தில் திரும்பி செலுத்துமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
''இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள கடன்களில் வங்கதேசத்திடம் பெற்றுக்கொண்ட கடனானது, மிகவும் குறைவான கடன் தான். இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான கடன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு தொகுதி கடன் கிடைக்கவுள்ளது. அந்த கடன் வழங்கப்படுமாக இருந்தால், அதிலிருந்து தங்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்குமாறு வங்கதேசம் எதிர்பார்க்கின்றது. சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மீள் செலுத்த முடியாதுள்ள கடன்களின் பெருந் தொகையை செலுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் தொகை உதவி அளிக்கும்," என பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.