ரூ.57 கோடி இல்லாததால் கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவிக்கும் இலங்கை
12 Oct,2022
டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இலங்கையில் இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம். மேலும் படிக்க கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. இதற்கிடையே, 99 ஆயிரம் டன் கச்சா எண்ணையை ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல், இலங்கையை நோக்கி வந்தது. கடந்த 20-ந் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வந்தது. கொழும்பு துறைமுகம் அருகே நங்கூரமிட்டு
நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த கச்சா எண்ணெயை பெற வேண்டுமானால், 70 லட்சம் டாலர் (ரூ.57 கோடி) செலுத்த வேண்டும். ஆனால் அவ்வளவு டாலர் இல்லாததால், இலங்கையால் வாங்க முடியவில்லை. அதனால் 3 வாரங்களாக அக்கப்பல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அந்த கப்பலுக்கு தாமத கட்டணமாக நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் டாலர் அளிககப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்'
தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை. 3 ஆயிரத்து 500 படுக்கைகள் கொண்ட இலங்கை தேசிய ஆஸ்பத்திரியில், 60 அத்தியாவசிய மருந்துகள் மட்டுமே உள்ளன. மயக்க மருந்து வினியோகம் குறைவாக உள்ளது. அதனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட முக்கியமான பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புற்றுநோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கும்
மருந்துகள் கிடைக்கவில்லை. பேண்டேஜுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமப்புற ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு விட்டன. அவர்களை நகர ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்புவதால், அங்கு கூட்ட நெரிசல் நிலவுகிறது. டீசல் தட்டுப்பாட்டால், மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மருத்துவர்கள், நல்ல வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது. மனித பேரழிவை நோக்கி செல்லும் இலங்கையில்,
இன்னும் 6 மாதங்களில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கை சுற்றுலா தொழிலை வளர்ச்சி அடைய செய்ய உதவுவதாக இந்திய பயண முகவர்கள் சங்கம் உறுதி அளித்துள்ளது. அதன் தலைவர் ஜோதி மாயாள் கூறியதாவது:- இலங்கை, பார்க்க வேண்டிய நாடு. சில மாதங்களாக எண்ணற்ற சவால்களை சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது அவசியம் என்று கருதுகிறோம். செலவழிக்கும் பணத்துக்கு மதிப்பு உடையது. இந்தியாவின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நாடு. எனவே, இலங்கையின் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி செல்ல உதவுவோம். இவ்வாறு அவர் கூறினார்.