சிறையில் இருக்கும் விடுதலை புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்’ -
09 Oct,2022
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவிற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது எனவும் அது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர்கள் மீதான பயங்கரவாத தடுப்புச்சட்டம் ரத்து செய்யப்படும் எனவும் அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போரில் சுமார் 12,000 விடுதலைப்புலிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என இலங்கை அரசு தெரிவித்திருந்தது.
போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 7-ம் தேதி அந்த நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த 2 முக்கிய கோரிக்கைகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்வைக்கப்பட்டன. சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்குதேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார்.” என தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவிற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது எனவும் அது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.