2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்டோபர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"அரசியலமைப்பின் 35-வது ஷரத்தில் ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்கும்போது, அவரின் பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் - அவர் செய்த அல்லது செய்யாது விட்ட எவ்விடயம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை எதுவும் தொடுக்கப்படுதல் அல்லது தொடர்ந்து நடத்தப்படுதல் ஆகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது".
"ஆனால் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும். அந்த வழக்கை சட்ட மா அதிபருக்கு எதிராகவே தாக்கல் செய்ய முயும் என்பதுதான் சட்ட ஏற்பாடாக உள்ளது" என்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்.
"அரசியலமைப்பின் இந்த ஏற்பாடு 'வழக்குகளில் இருந்து ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் தற்காப்பு' எனக் கூறப்படுகிறது. அரசியல் யாப்பு ரீதியாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை இது உள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும், ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலத்தில் மட்டும்தான் இந்த சிறப்புரிமை உள்ளது என்றும், அவரின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு - அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 138ஆவது பிரிவின் கீழ், தனியார் ஒருவர் குற்றவியல் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க முடியும் எனக்கூறும் ருஷ்தி ஹபீப் "அதற்கிணங்கவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்கிறார்.
"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் நபர் முன்னாள் ஜனாதிபதி. அவர் ஜனாதிபதி பதவி வகிக்கவில்லையாயின் அவருக்கு எதிராக குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்யலாம் என்பது அரசியலமைப்பின் ஏற்பாடாக உள்ளது" எனவும் அவர் கூறினார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், பாரதூரமான கவனக்குறைவோடு இருந்தமையினாலேயே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது எனக்குறிப்பிட்டு, அவருக்கு எதிராக மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கூறுகின்றார்.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி - கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் தினத்தில், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 277 பேர் கொல்லப்பட்டதோடு, 400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனை பதவி வகித்தார்.
அவர் தாக்குதல் நடந்த சமயம் சிங்கப்பூரில் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார்.
அந்தக் ஆணைக்குழு வெளியிட்ட இறுதி அறிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததோடு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈஸ்டர் தினத் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பிலிருந்து தவறியமைக்காக, அப்போது பதவிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடுப்பதற்கு, அவரால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு - தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டுமென, தாக்குதலால் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட பலவேறு தரப்பினர் - தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.