நன்றி இந்தியா' நெகிழ வைத்த இலங்கை மக்கள்
01 Sep,2022
இலங்கையின் மூத்த சகோதரன் என்ற வகையில் இலங்கை கடினமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தியா எப்போதும் உடன்நின்று ஆதரவு வழங்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் நெருக்கடியான தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது உணர்ச்சிப்பெருக்குடன் ஏற்புரையாற்றிய போதே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக உரிய தருணத்தில் இந்திய அரசாங்கத்தினாலும் அந்நாட்டு மக்களாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்புகள் குறித்தும், இந்தியாவினால் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிகளின் முக்கியத்துவம் குறித்தும் இலங்கை மக்களின் சார்பில் மனப்பூர்வமான நன்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய உதவித் திட்டம்
பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் நோக்கில் எரிபொருள் கொள்வனவிற்கான கடனுதவித்திட்டம், உரக்கொள்வனவிற்கான கடனுதவித்திட்டம் உள்ளடங்கலாக இவ்வருடத்தில் மாத்திரம் இந்தியாவினால் சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி, 500 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் மருந்துப்பொருள் அடங்கிய உதவிகள் கப்பல் மூலம் 3 கட்டங்களாக நாட்டை வந்தடைந்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.