“ராஜபக்ஷவினர் மீதான உள்நாட்டு,வெளிநாட்டு அழுத்தங்கள், அதிகரித்தாலோ, அவர்கள் தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதில் தோல்வி கண்டாலோ, மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் வேட்பாளராக தெரிவு செய்யக் கூடும்”
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாதமாகியும், அவர் பதவிக்கு வந்தபோது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து, அதன் ஊடாக நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்க்கப் போவதாக அவர் உறுதி அளித்திருந்தார்.
அத்துடன், தமது அந்த முயற்சிக்கு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஏனென்றால், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட எரியும் பிரச்சினைகள் அனைத்தையும் அதன் ஊடாக தீர்க்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகமும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும், வலியுறுத்தி வருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலமே, தற்போதைய நெருக்கடிகளைத் தணிக்க முடியும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 6 பில்லியன் டொலர் கள் உதவியைப் பெற்று நெருக்கடியை தணிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது.
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கமும், தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும், அரசியல் நெருக்கடிகளை கையாண்ட விதம், மனித உரிமைகள் விடயங்களில் நடந்து கொண்ட முறை, போன்ற காரணங்களால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீட்பு முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்தவுடன் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பியவர்களுக்கு, நாடுகளோ நிறுவனங்களோ தனிநபர்களை அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுப்பதில்லை என்ற உண்மை புலப்பட்டிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபரை நம்பியோ அவரது கொள்கை நிலைப்பாடுகளின் அடிப்படையிலோ, தீர்மானங்கள் எடுக்கப்படாது என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச சமூகமும், சர்வதேச நாணய நிதியமும் எதிர்பார்க்கின்ற, மாற்றங்களையும், தேவைகளையும், நிறைவேற்ற வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.
அதற்காகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சிகளுடன் நடத்திய பேச்சுக்கள் முழுமையான வெற்றியை பெறவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர கூறியது போன்று, அவர் பொதுஜன பெரமுனவின் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்பது தான் அதற்குப் பிரதான காரணம்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஆட்சியில் ஏறிய ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ குடும்பத்துக்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் செயற்பட வேண்டியது தவிர்க்க முடியாதாகியுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற நாள் தொடக்கம், அவர் போராட்டக்காரர்களை வேட்டையாடுவதிலும், ராஜபக்ஷவினருக்கு நெருக்கடி கொடுக்கும் விடயங்களை தவிர்ப்பதிலும், அவர்களைப் பாதுகாப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தினார்.
‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பது போல, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ‘ராஜபக்ஷ பாச’த்துக்குப் பின்னால் இன்னொரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவையே நிறுத்த வேண்டும் என்ற கருத்து, பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதுபற்றி சிலர் மஹிந்த ராஜபக்ஷவிடமும், பஷில் ராஜபக்ஷவிடமும் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இதுகுறித்து இன்னமும் எந்த உறுதியான பதிலை வழங்காவிடினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இப்போதே தேர்ந்தெடுக்காது என்பது நிச்சயம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் உள்ள நிலையில், போட்டியில் நிறுத்தும் நபர் குறித்து எந்தவொரு கட்சியும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுப்பதற்கு இது முற்கூட்டிய தருணமாகும்.
ராஜபக்ஷவினர் மீதான உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள், அதிகரித்தாலோ, அவர்கள் தங்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்துவதில் தோல்வி கண்டாலோ, மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை தங்களின் வேட்பாளராக தெரிவு செய்யக் கூடும்.
அதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது. பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேராத ஒருவர், ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கப்பட இடமளிக்கப்படாது.
அதனால், வெளியே இருந்து ரணில் விக்கிரமசிங்கவை தேர்வு செய்வதில் ராஜபக்ஷவினர் அதிக முன்னுரிமையை காண்பிக்க கூடும்.
இது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாத விடயமல்ல.
எனவே, அவர் ராஜபக்ஷவினரைப் பகைத்துக் கொள்ளாமல், ஆட்சியைத் தொடரவே விரும்புவார்.
இப்போது அவர், அதனையே செய்து கொண்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க, ‘ரணில் ராஜபக்ஷ’வாக தோற்றத்தைக் காண்பிக்கின்ற இந்த நிலையை, பிரதான எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.
சர்வகட்சி அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தரத் தயாராக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
அதற்கு முக்கியமான காரணம், ரணில் – ராஜபக்ஷ இடையிலான தொடர்புகள் தான்.
இந்த தொடர்புகள், சந்தேகத்துக்குரியவையாக தொடர்வதாலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுன வேட்பாளராக அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிய பின்னர் எதிர்க்கட்சிகளால் உசாராக இல்லாமல் இருக்க முடியாது.
அதேவேளை பொதுஜன பெரமுனவுக்கு, சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதில் அதிக விருப்பம் கிடையாது.
அவ்வாறான அரசாங்கம் அமைக்கப்பட்டால், ராஜபக்ஷவினரின் செல்வாக்கு குறைந்து போகும். தாங்கள் விரும்பியதை ரணில் மூலம் செய்ய முடியாமல் போகும்.
அதனால் கூட அவர்கள், ரணிலைத் தங்களின் முகவராக காண்பித்து, அடுத்த வேட்பாளராக காண்பித்து, சர்வகட்சி அரசாஙகத்தில் இருந்து எதிர்க்கட்சிகளை தூர விலகி நிற்க வைப்பதற்கு வியூகம் வகுக்கலாம்.
எது எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறையத் தொடங்கியிருக்கின்றன.
அவருக்கான நாட்கள் குறைந்து கொண்டிருக்கின்றன.
துரிதமாக அவர் சுதாகரித்துக் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கத் தவறினால், அல்லது அதற்கான முயற்சிகளை முன்னெடுக்காவிட்டால், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்க தள்ளப்படுவார்.
ரணில் விக்கிரமசிங்க தற்செயலான ஒரு விபத்தாகத் தான் ஜனாதிபதி ஆகத் தெரிவாகியிருக்கிறார்.
அவர் பாராளுமன்றத்தில் வைத்திருக்கும் ஒற்றை ஆசனமோ, அவரது கடந்தகால அனுபவங்களோ இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தவில்லை.
ராஜபக்ஷவினருடன் இருந்த பரஸ்பர நம்பிக்கையும், மேற்குலகுடன் உள்ள உறவுகளும் தான் அவரை ஜனாதிபதி ஆக்கியது.
இந்த இரண்டும் மட்டும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அல்லது, நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு உதவாது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தோல்வியை தழுவி விட்டார்.
இவ்வாறான நிலையில் அவர் எஞ்சியிருக்கும் காலத்தை எவ்வாறு கொண்டு நடத்தப் போகிறார் என்பதை, சர்வதேச சமூகமும், சர்வதேச நாணய நிதியமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க இந்தச் சூழலில் சுதாகரித்துக் கொள்ளத் தவறினால், இன்னொரு ராஜபக்ஷவாக வரலாற்றில் இடம்பிடிப்பது தவிர்க்க முடியாததாகி விடும்.