இந்தியாவுடன் சேர்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! – இலங்கை அதிபர் உருக்கம்!
06 Aug,2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய அரசு இந்தியாவுடன் ஒன்று படாததே காரணம் என அதிபர் ரணில் விக்ரமசிங்கெ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கோத்தபாய ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தற்போது இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். இலங்கையில் அனைத்துகட்சி ஆட்சி அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் அதில் பேசிய ரணில் விக்ரமசிங்கே “இலங்கை பொருளாதாரத்தை நவீனப்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகளை நம்பியே இலங்கை இயங்க முடியாது. வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை எதிர்த்ததே இலங்கை சிக்கலில் சிக்க காரணம். இந்தியாவுடன் இணைந்து திரிகோண மலையில் எண்ணெய் வயல் வளாகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் அது இலங்கையை இந்தியாவிற்கு விற்பது போல என்று சொல்லி நிறுத்தி விட்டார்கள். அதை அனுமதித்து இருந்திருந்தால் இன்று இலங்கை எரிபொருள் பற்றாக்குறையில் சிக்கி இருக்காது.
இந்த சிக்கலான நேரத்தில் இந்தியா அளித்த உதவியை குறிப்பிட்டாக வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு வழங்கிய பொருளாதார உதவி இலங்கைக்கு உயிர் மூச்சு அளித்தது. இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.