சீன உளவு கப்பல் இலங்கைக்கு புறப்பட்டது
05 Aug,2022
இலங்கையில் தனது ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்துதற்கு வசதியாக சீனா அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா அதிக அளவில் கடன் கொடுத்து உள்ளது. இதற்கு கைமாறாக இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தையாக சீனாவுக்கு அளித்துள்ளது. இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள துறைமுகம் ஆகும். இதையடுத்து இந்த துறைமுகத்தில் தனது உளவு கப்பலை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை சீனா எடுத்து வருகிறது. நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட யுவான் வாங்-5 என்ற உளவு கப்பலை இந்த துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவு செய்தது.
சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இக்கப்பல் நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இந்த கப்பல் நிறுத்தப்படுவதால் இது பாதுகாப்பு அச்சுறுத்துலாக கருதப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ளும் திறன் இந்த உளவு கப்பலுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானதும் இந்தியா உஷார் ஆனது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இது பற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேசப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சீன உளவுக்கப்பல் இலங்கையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இக்கப்பல் வருகிற 11 அல்லது 12-ந்தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்து சேரும் என தெரிகிறது. 17-ந்தேதி வரை இக்கப்பல் இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேசமயம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தைவானை சுற்றி சீனா தனது படைகளை குவித்து வைத்து இருக்கும் நிலையில் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கப்பலை இலங்கைக்கு அனுப்பி உள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.