ரணிலின் வெற்றியின் பின்னணியில் பசில்! அரசியல் பரப்பில் நிலை கொண்டுள்ள ராஜபக்சக்கள்
25 Jul,2022
ராஜபக்சர்களின் முகவரே ரணில்
சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னணியில் பசில் ராஜபக்சவே உள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்சர்களின் முகவரே ரணில் என நேற்று ஐபிசி தமிழின் சொல்லாயுதம் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டிய சுமந்திரன், நேற்று இடம் பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றியின் பின்னணியில் பசில் ராஜபக்ச உள்ளார் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் பரப்பில் நிலை கொண்டுள்ள ராஜபக்சக்கள்
ரணிலின் வெற்றியின் பின்னணியில் பசில்! அரசியல் பரப்பில் நிலை கொண்டுள்ள ராஜபக்சக்கள் | Ranil Basil Sri Lanka Political
கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து கடந்த 20ம் திகதி புதன்கிழமை இடம் பெற்ற சிறிலங்காவின் புதிய அதிபருக்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திசாநாயக்க என்போர் போட்டியிட்டனர்.
பெரும்பாலான கட்சிகள் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவுக்கும் டலஸ் அழகப்பெருமவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியிருந்தது.
தேர்தலின் இறுதிக்கணம் வரை டலஸ் அழகப்பெருமவுக்கு வெற்றிவாய்ப்பு எனக் கணிக்கப்பட்டாலும் முடிவுகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு சார்பாகவே வெளிவந்தன.
அனைத்து கட்சிகளும் வெளிப்படையாக டலஸ்க்கு ஆதரவு என அறிவித்திருந்த நிலையில் எவ்வாறு டலஸ் தோற்றார் எனவும் திரைமறைவில் வாக்குகளை மாற்றி செலுத்தியிருக்கின்றார்கள் எனவும் அனுரகுமார குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னணியில் பசில் ராஜபக்சவே உள்ளார் என சுமந்திரன் தெரிவித்திருப்பது ராஜபக்ச குடும்பம் மக்கள் ஆணை இழந்து விட்ட போதும் அரசியல் பரப்பில் இன்னமும் நிலை கொண்டள்ளது என்பதை நிரூபிக்கும் முகமாவே உள்ளது.