இந்தியா மட்டுமே உதவி வருகிறது.. இலங்கை அமைச்சர்!
17 Jul,2022
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அந்நாடு திவால் ஆகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருள்கள், எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதையடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு, அதை சூறையாடினார்.
போராட்டமானது ராணுவம் மற்றும் காவல்துறையின் கையை மீறி போன நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பி, ராணுவ உதவியோடு தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். முதலில் மாலத்தீவுக்கு சென்று தஞ்சம் புகுந்த ராஜபக்ச பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று தஞ்சம் புகுந்துள்ளார்.
இடைக்கால அதிபராக ரணில் தேர்வாகியுள்ள நிலையில், புதிய அதிபரின் தேர்வு ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கையில் நிலைமையை சீரமைக்க அந்நாட்டின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளின் உதவியை இலங்கை அரசு நாடிவரும் நிலையில், இந்தியா மட்டுமே இதுவரை உதவிக்கரம் நீட்டியுள்ளதாக அந்நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் அமைச்சர் கஞ்சனா விஜிசேகரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பல்வேறு நாடுகளிடம் எரிபொருள் தேவைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம். யார் உதவினாலும் எங்களுக்கு நல்லதே. ஆனால் இந்தியா மட்டுமே இதுவரை எங்களுக்கு கடன் வழங்கி உதவி வருகிறது. ரஷ்ய அரசிடமும் நாங்கள் தொடர் ஆலோசனையில் உள்ளோம். ரஷ்யாவில் இதற்கான சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. எங்கள் தேவை அவர்களுக்கு கூறப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது. எரிபொருள், உணவு, மருந்துகள், உரம் உள்ளிட்ட அனைத்து அத்தியவசிய பொருள்களை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா வழங்கியுள்ளது.