பாண்டிச்சேரி, காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் சேவை!
20 Jun,2022
இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களில் இருந்து காங்கேசன் துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், மருந்துப் பொருட்கள், பால்மா, உர வகைகள் உட்பட்ட அத்தியாவசிப் பொருட்களை இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்து வந்து நியாயமான விலையில் தேவையானளவு மக்களுக்கு கிடைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவையில் இதுதொடர்பாக பிரஸ்தாபித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சம்மத்தினையும் ஆலோசனைகளையும் பெற்றிருந்த நிலையில், துறைசார் அமைச்சர் இன்று காங்கேசன்துறைக்கு வருகை தந்து நிலவரங்களை ஆராய்ந்தார். இதனையடுத்து, அன்றாடப் பொருட்களை கொண்டு வருவதற்கான போக்குவரத்தினை உடனடியாக ஆரம்பிப்பதற்கும், தேவையான அடிப்படை தேவைகளை வசதிகளை உருவாக்கிய பின்னர், பொது மக்கள் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் கூறியுள்ளார்.