நேருக்கு நேர் வர இருந்த இரு விமானங்கள்-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
16 Jun,2022
லண்டனில் இருந்து கொழும்பு வந்த விமானம், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக இலங்கை ஏர்லைன்ஸ் பாராட்டியுள்ளது. கொழும்பு, லண்டனில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதக்கூடிய அபாயம் இருந்த நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. விமானிகளின் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை பாராட்டுவதாகவும், அனைத்து பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த இலங்கை விமானம், பறக்கும் உயரத்தை 35,000 அடிக்கு அதிகரிக்கவேண்டும் என்று அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கூறப்பட்டது. அப்போது, 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இலங்கை விமானத்தின் விமானிகள் கண்டறிந்தனர். Also Read - உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.73 கோடியாக உயர்வு..! இதுபற்றி அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2 முறை தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கை விமானிகள், விமானத்தை மேலே உயர்த்த மறுத்துவிட்டனர். பின்னர் சில நிமிடங்கள் கழித்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர தகவல் அனுப்பப்பட்டது. ஏற்கனவே 35,000 அடிக்கு மேலே துபாய் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருந்ததால், ஸ்ரீலங்கன் விமானத்தின் உயரத்தை ஏற்ற வேண்டாம் என்று தெரிவித்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூறிய தகவலின்படி, இலங்கை விமானத்தின் கேப்டன் விமானத்தை குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்தியிருந்தால், வேகமாக வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் நடுவானில் மோதி விபத்தை எதிர்கொண்டிருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.