இலங்கையில் மூடப்படும் இரு முக்கிய விமான நிலையங்கள்
01 Jun,2022
கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் (பராமரிப்பு) மற்றும் விமானப் பற்றாக்குறை காரணமாக இந்த விமான நிலையங்களை இயக்குவது பெரும் பிரச்சினையாக இருப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குறிப்பாக இரண்டு விமான நிலையங்களிலும் ஊழியர்களின் பராமரிப்புக்கு பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மத்தள விமான நிலையத்தில் கடமைக்காக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் சொகுசு பேருந்து ஒன்று கட்டுநாயக்காவில் இருந்து மத்தளை வரை அதிக செலவில் தினமும் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறுமையாக சென்ற விமானம்
இதேவேளை, இரத்மலானை விமான நிலையம் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட விமான நிலையமாகவே உள்ளது என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் மார்ச் 27 அன்று சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டதுடன், குறித்த தினத்தில் தனது முதல் பயணத்தை மேற்கொண்ட மாலைதீவு தேசிய விமான சேவை வெறுமையாக மீளத்திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய திறப்பு விழாவிற்கு சுமார் 8 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.