எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கொழும்பு துறைமுகத்தில் இலவச மிதிவண்டி
01 Jun,2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசு பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதனால் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
இலங்கை விமானங்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் பிரதான துறைமுகமான கொழும்பு துறைமுகத்தில், இலவச மிதிவண்டி சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்கள் பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் இல்லாமல் பயணிக்க முடியும்.
கொழும்புவில் பெட்ரோல் மற்றும் டீசலை சிக்கனப்படுத்தும் நோக்கில் இந்த சைக்கிள் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்த துறைமுகம் 469 ஹெக்டேர் (1,160 ஏக்கர்) நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் மிக நீளமான சாலை வசதி உள்ளது. அது சுமார் நான்கு கிலோமீட்டர்கள் (2.5 மைல்) வரை நீண்டுள்ளது.
துறைமுக தொழிலாளர்கள் துறைமுகத்தில் பயணிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பதிலாக மிதிவண்டிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்காக 100 மிதிவண்டிகள் துறைமுகத்தில் உள்ளன.
இது குறித்து, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான்ன கூறியதாவது, "துறைமுகத்திற்கு வருபவர்கள் மற்ற வாகனங்களுக்கு பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்தும் வகையில், பயன்படுத்தப்படாத ரெயில் பாதையை சைக்கிள் பாதையாக மாற்றி அமைத்துள்ளோம். இலங்கையை கடுமையாக பாதித்துள்ள பொருளாதார பிரச்சனைகளில் இருந்து துறைமுகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி துறைமுகத்தில் செயல்பாடுகளை சீர்குலைக்கவில்லை. வேறு இடங்களில் எரிபொருளை பெறுவதற்கு சிரமப்படும் கப்பல்துறை தொழிலாளர்களுக்கு மட்டும், துறைமுகம் தனது சொந்த இருப்புகளிலிருந்து பெட்ரோலை வழங்கி வருகிறது. எங்களிடம் எரிபொருள் கையிருப்பு இருப்பதால் நாங்கள் வழக்கம் போல் எங்கள் வேலையைச் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.