பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான காஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.
இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.நிதியமைச்சர் நியமனம், இன்று இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம்!
ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் பணவீக்கம் அதிகரிக்கும் எனவும் இதனால் மக்கள் போராட்டம் நடத்தப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு உதவ நிதி வழங்கப்படும் என்றும் கூறினார். எதிர்வரும் கடினமான நாட்களைப் பார்க்கும்போது, எதிர்ப்பு இருக்க வேண்டும்.
மக்கள் பாதிக்கப்படும்போது அது இயற்கையானது, அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும், குறித்த மக்களின் எதிர்ப்பு அரசியல் அமைப்பை சீர்குலைக்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
எங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது நாம் மேலும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சிட வேண்டும்," என்று விக்ரமசிங்க கூறினார். வருடாந்த பணவீக்கம் வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்று அவர் எச்சரித்தார்.
இது ஏற்கனவே அதிக விலைகளுடன் போராடும் இலங்கை குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, பணவீக்கம் மார்ச் மாதத்தில் 21.5 வீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 33.8 வீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
71 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன்!
.
தாம் 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றும் பிரதமர் பதவியை நிராகரித்தது இந்த நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு துரோகமிழைக்காமல், அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தம்மை ராஜபக்ச குடும்பத்திற்குப் பொறுப்பான பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவோ அல்லது அவர்களின் பராமரிப்பாளராகவோ நியமிக்குமாறு கேட்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்கைகளுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும், 20 ஆவது திருத்தத்தை நிராகரிக்கவும் தாம் தயார் எனவும், இந்த நாட்டு மக்களுக்கு மனித உரிமைகள், பொருளாதார உரிமைகளை வழங்கி அந்தக் கடமையை நிறைவேற்றத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளை மதிக்கும் புதிய அரசியல் பயணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வாறாயினும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.