விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை- கோத்தபய ராஜபக்சே
20 May,2022
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந்தது இல்லை. மனிதாபிமான நடவடிக்கை மூலம் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி முடிவடைந்தது. அந்த தேதி, போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில், போர் வீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரியாகவும் இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை மூலம் போரை முடித்து, அமைதியை கொண்டு வந்தன. அந்த போரில், வெறுப்புணர்வோ, ஆத்திரமோ அல்லது பழிவாங்கும் உணர்வோ இருந்தது இல்லை. அப்படி அமைதி உருவாக்கப்பட்ட நாட்டில் இனவெறிக்கோ, எந்தவகையான பயங்கரவாதத்துக்கோ இடமில்லை. இதுதான் இலங்கையின் தனித்த பண்பாடு. வெளிநாட்டு குழுக்களை முறியடிக்க வேண்டும் தற்போது நாம் சந்தித்து வரும் சூழ்நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடி, அரசியல், சமூக கலவரமாக மாறிவிட்டது. எந்த சூழ்நிலையிலும், நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் கொள்கையை கைவிட மாட்டோம். பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும், தனிநபர்களும் தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி, தேச பாதுகாப்பை குழிதோண்டி புதைக்க முயற்சிப்பதில் சந்தேகமே இல்லை. நாம் ஒன்றுசேர்ந்து அதை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை- கோத்தபய ராஜபக்சே