இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார்கிந்த ராஜபக்சே வாழ்த்து
12 May,2022
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் வீடுகள், ஓட்டல்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வன்முறை சம்பவங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை மேற்கொண்டார்.
பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதனால் இடைக்கால அரசு அமைப்பதில் சிக்கல் உண்டானது. மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
பிரதமர் பதவியை ஏற்பதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் பதவியை ஏற்குமாறு ரனில் விக்ரமசிங்கேவிடம் கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், இன்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26வது பிரதமராக ரனில் பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6வது முறையாக அவர் பிரதமர் ஆகி உள்ளார்.
ரனில் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. அமைச்சரவையில் 15 பேர் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், இக்கட்டான சூழலில் பொறுப்பேற்றுள்ள நிலையில் நாட்டை சிறப்பாக வழிநடத்த வாழ்த்துகள் என மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.