இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலரும், அந்நாட்டின் முன்னாள் அமைச்சருமான் ஜீவன் தொண்டமான்: இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு, சில ஆண்டுகளாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு எடுத்த, சில தவறான முடிவுகளே காரணம்.பார்லிமென்ட் தேர்தல் நேரத்தில், '10 ஆண்டுகளுக்குள், ரசாயன உரங்களின் பயன்பாட்டை, 50சதவீதம் குறைப்போம்' என்று தான் அவர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படி, ஆண்டுக்கு 5 சதவீத அளவுக்கு, ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, ஒரே நாள் இரவில், 100சதவீதம் தடை விதிப்பதாக அறிவித்து விட்டார். இந்தத் தடையால், தேயிலை தொழில் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. தோட்டத் தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்;
அடுத்த ஆண்டு தான், இதன் முழு பாதிப்பும் தெரிய வரும்.பொருளாதார வீழ்ச்சிக்கு, ராஜபக்சே குடும்பம் மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது; வேறு பல பின்னணிகளும் உள்ளன. இதில், எல்லாருக்குமே பங்கிருக்கிறது. நாங்கள் அரசை விட்டு வெளியில் வந்து விட்டாலும், அவர்கள் மீது எல்லா பழியையும் போட்டு, தப்பிக்க விரும்ப வில்லை.
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களை பயன்படுத்தி, எல்லா கட்சியினரும் அரசியல் செய்ய நினைப்பர். அதேநேரம், இலங்கையில் இனி வரும் காலம், மிக மோசமானதாக இருக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியும். காரணம், இலங்கை அரசு இப்போது உலக வங்கியிடம் உதவி கேட்டு நிற்கிறது. அவர்களோ இலங்கை பொருளாதாரத்தை சரி செய்ய நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது, சிங்களர்கள் வேடிக்கை பார்த்தனர். இப்போது, அவர்களுக்கும் பாதிப்பு என்றதும், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து விட்டனர். ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு, தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் ஆதரவளித்து வருகின்றனர்.
எல்லாரும் சிங்களர், தமிழர், முஸ்லிம் என்பதை மறந்து, இலங்கையர் என்று உணரும் போது தான், நாட்டில் நிலையான ஆட்சியும், சமத்துவமும் வரும். ஆனால், புத்த மதத்தினருக்கே முன்னுரிமை என்கிற சட்டத்தை மாற்றாத வரை, இலங்கையில் சமத்துவம் என்பது கேள்விக்குறி தான்.