சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஉதவி கோரி இலங்கை குழு அமெரிக்கா பயணம்
18 Apr,2022
எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 12 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியா முதலில் ரூ.3 ஆயிரத்து 800 கோடியும், பிறகு ரூ.7 ஆயிரத்து 500 கோடியும் கடன் வழங்கி உள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, அவரது அலுவலகம் அருகே கடந்த 10 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
ஒட்டுமொத்த மந்திரிகளும் பதவி விலகினர். அனைத்து கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க அதிபர் மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை. இந்த வாரம் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளன.
பொருளாதார சிக்கல் காரணமாக, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணைகளை இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், இலங்கை பங்குச்சந்தை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரம் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு, தெளிவான முடிவு எடுக்க முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) 4 பில்லியன் டாலர் (ரூ.30 ஆயிரம் கோடி) நிதிஉதவி பெற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கையின் புதிய நிதி மந்திரி அலி சாப்ரி தலைமையிலான குழு நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் அக்குழு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதிவரை பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிகிறது.