சிறிலங்காவில் கொதிநிலை - இந்தியாவிடம் அவசர கோரிக்கை ஆட்சியை ஒப்படைக்கத் தயார் - அரசாங்கம்
05 Apr,2022
கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பில் சிக்கியுள்ள சிறிலங்காவை காக்க இந்தியாவால் முடியும் என்பதால், உடனடியாக உதவுமாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவசரமான ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்காவில் நெருக்கடிகளும் அரசியல் குழப்பங்களும் அதிகரித்துவரும் நிலையில், சஜித் பிரேமதாச இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அதிகபட்சமாக உதவுமாறு வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
முடிந்தவரை சிறிலங்காவுக்கு உதவிசெய்து அதனை மீட்டெடுக்க இந்தியா முன்வரவேண்டும் எனக்கோரியுள்ள அவர், மக்களின் உயிர்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக இந்தியா இதனை செய்யவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அமைச்சரவையின் பதவி விலகல் நாட்டு மக்களை முட்டாளாக்கும் நாடகம் எனவும் இந்தியப் பிரதமருக்கான கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் உண்மையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காத நிலையில் இந்தியா உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம்! ஆட்சியை ஒப்படைக்கத் தயார் - அரசாங்கம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்பான்மையினை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியினை ஒப்படைக்கத் தயார் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.