இலங்கை பொருளாதார நெருக்கடி.. சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!
27 Mar,2022
இலங்கை பொருளாதாரம் திவால் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
ஒரு காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை, தற்போது 70 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பொருளாதார சீரழிவை சந்தித்து வருகிறது. சமையலுக்கான எரிவாயுவில் தொடங்கி மின்வெட்டு வரை மக்கள் சந்திக்காத இன்னல்களே இல்லை எனலாம். உணவு, மருந்து, உடை உட்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கட்டுப்பாடில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. அரசின் விலைக் கட்டுப்பாட்டு அதிகார சபை செயலிழந்துவிட்டதால் எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகப்படியான கடன் மூலம் இலங்கை, தற்போது solvency பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கையில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாகக் கடன் பெற வேண்டி சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் வருகை குறைந்தது ஆகிய காரணங்களால் இலங்கையின் அன்னிய செலாவணி அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் கடன் சுமை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்றும் நீண்ட காலத்திற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதாரம் மற்றும் விலைவாசி பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வட்டி விகிதத்தை உயர்த்தவும், அவசியம் இல்லாத பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார்