கடும் பொருளாதார நெருக்கடி: இலங்கையில் கியாஸ் நிறுவனங்கள் மூடல்
17 Mar,2022
இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
இதற்கிடையே இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். அவர் நாடாளுமன்ற காம்ப்ளக்சில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த பசில் ராஜபக்சே, வரும் 30-ந்தேதி இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து வெளியுறவு செயலாளர் ஹர்சவர்தன் ஷிரிங்லா மற்றும் பல்வேறு அதிகாரிகளையும் பசில் ராஜபக்சே சந்தித்து பேசினார்.