18 ஆண்டுகளாக சிறுமிகளை விற்பனை செய்த நபர்
24 Feb,2022
சிறுமி ஒருவரை தவறான தேவைக்காக விற்பனை செய்துவந்த குற்றச்சாட்டில் கல்கிஸை சேர்ந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தற்போது, கைது செய்யப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளில் நான்கு கோடியே 56 இலட்சத்து 81 ஆயிரத்து 905 ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அந்த நபர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள், சிறுமியரை தவறான செயலுக்காக விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவினால் நேற்று (23-02-2022) புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் 15 வயது சிறுமி தவறான தேவைக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, சிறுமியை பாலியலுக்காக விற்பனைசெய்தமை மற்றும் அதற்கு உதவியமை குறித்து சட்டவிரோதமாக சொத்துகள் தொடர்பான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
அதனடிப்படையில் 36 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு சொந்த விலாசம் இல்லையென்பது நிரந்தர வதிவிடம் ஒன்றும் இல்லையென்றும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் பல பகுதிகளிலும் கடந்த 18 அண்டுகளாக பெண்களையும் சிறுமியரையும் பாலியல் தேவைக்காக விற்பனை செய்தல், விபசாரத்தில் ஈடுபடுத்தல் போன்ற செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டு பெண்களையும் சிறுமியரையும் விபசாரத்துக்காக விற்பனைசெய்து வந்துள்ளார். அவ்வாறே குறித்த 15 வயது சிறுமியும் அவரது தாயாரும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் வாத்துவவில் கடந்த திங்கட்கிழமை (21-02-2022) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை நேற்று முன்தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் 04-03-2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்