கோட்டாபய பிறப்பித்த அதிரடி உத்தரவு
15 Feb,2022
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் ஆகியவற்றினை மேற்கொள்ள கூடாது என சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapakse) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு சிறிலங்கா அரச தலைவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
இதன்போது சிறிலங்கா அரச தலைவர் கருத்து வெளியிடுகையில்,
எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவையில் கேட்டுக்கொண்ட போதே சிறிலங்கா அரச தலைவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்தும் அவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.