எரிபொருள் பற்றாக்குறை: இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க இலங்கை முடிவு
02 Feb,2022
அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கை, ஒரு சேர தலைதூக்கும் பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது. எரிபொருள் சப்ளை இல்லாமல் அனல் மின்நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய நேரங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நாட்டின் எரிபொருள் தேவையை ஈடுசெய்ய பெட்ரோல், டீசலை வழங்குமாறு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மின்சக்தித் துறை மந்திரி காமினி லொகுகே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தலா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசலை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை மந்திரிசபை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 40 ஆயிரம் டன் டீசல் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.