இலங்கையில் கோர விபத்து 26 பேர் வைத்தியசாலையில்
10 Jan,2022
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி தோப்பூர், பட்டித்திடல் பகுதியில் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த 26 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று (10) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பஸ்ஸும், மூதூரிலிருந்து சேருவில நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் அதிகளவில் அரச உத்தியோகத்தர்களே பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் வாகனத்தில் சிக்கிய டிப்பர் வாகனத்தின் சாரதி, சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் விபத்தில் அவரது கால்கள் சேதமடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.