இந்தியாவிற்கு எண்ணெய்க் குதங்களை வழங்கினால்! அச்சுறுத்தலும் அதிகரி
08 Jan,2022
இந்தியாவிற்கு எண்ணெய்க் குதங்களை வழங்கினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீன தயாரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா அரசாங்கத்தினால் இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட எண்ணைக் குதங்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையில் இந்தியாவிற்கு எண்ணெய்க் குதங்கள் வழங்குகின்ற உடன்படிக்கையானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. அங்கு இந்தியாவின் கொடியே பறக்கும். இதனால் சீனா கோபமடையும் நிலையும் ஏற்படும்.
இதனால் பாதிக்கப்படுவது இலங்கையே. எண்ணெய்க் குதங்களை எமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதன் ஊடாக நாட்டிற்கு மேலும் வருமானத்தை ஈட்ட முடியும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடையும் போது கொள்வனவு செய்து சேமித்து வைக்க முடியும்.
விலையேறும் போது அதனை விற்று வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். தேசிய சொத்துக்களை ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ச்சியாக விற்று வருகின்றது. எதிர்காலத்திலும் விற்பனை செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
ஆட்சியாளர்களுக்கு, மக்கள் அதிகாரத்தை ஐந்து வருடங்களுக்கே வழங்குகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் மக்களை பல ஆண்டுகளுக்கு வெளிநாடுகளிடம் அடகு வைக்கும் நிலை காணப்படுகின்றது. இது பாரிய பிரச்சனையாகும்.
எதிர்கால சந்ததியினரை அடகு வைக்கும் நிலையினை ராஜபக்ஷ அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்