அரசை விமர்சித்த அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்
06 Jan,2022
அரசை விமர்சித்த முக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அரசை விமர்சிப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவியது முதல் இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இதனிடையே, விவசாய கொள்கையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பெரிய மாற்றத்தை கொண்டுவந்தார். ஆனால் இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் இலங்கை பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் அரசின் விவசாயக் கொள்கையை ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
ஆளும் கட்சியின் மத்திய அமைச்சரான சுசில் பிரேமஜயந்தா, இலங்கை அரசை விமர்சித்து பேசியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்ச அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும், அரசுக்கு எதிராக பொதுவெளியில் பேசும் அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் சொந்த கட்சிக்கும், அரசுக்கும் எதிராக பேசுவது தர்மம் கிடையாது. ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கலாம் அல்லது ஆலோசிக்கலாம், அதை விட்டு மீடியா முன்னிலையில் அரசை விமர்சிக்கக் கூடாது என அவர் தெரிவித்தார். உணவுப் பஞ்சம் விரைவில் ஏற்படலாம் என பேசியதற்காக சமீபத்தில் விவசாயச் செயலரையும் பணியிலிருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.