மேலும் மோசமான கடன் பொறிக்குள் சிக்கும் சிறிலங்கா!
30 Dec,2021
சர்வதேச நாடுகளிடம் கடன்களை பெற்று சிறிலங்காவின் வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க முடியாது எனவும், அவ்வாறு முயற்சிப்பதன் மூலமாக மேலும் மோசமான கடன் பொறிக்குள் சிக்கும் நிலைமையே ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறுகியகால சவால்களை எவ்வாறு கையாள்வது என்பதும், நீண்டகால கடன் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பதும் பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் சீனாவிடம் புதிதாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய டொலர்கள் இல்லை, குழந்தைகளுக்கான பால்மாவை இறக்குமதி செய்ய வெளிநாட்டு கையிருப்பு இல்லை, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க டொலர் இல்லை.
நாட்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கக்கூடிய வகையில் எமது வெளிநாட்டு கையிருப்பு இல்லை. எம்மிடம் உள்ள நிரை வெளிநாட்டு கையிருப்பு குறித்தே சிந்திக்க வேண்டும்.
கடன்களை பெற்று வெளிநாட்டு கையிருப்பை வெளிக்காட்ட முடியாது. எமது கையிருப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளன. இப்போது சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்கள் மூலமாக இந்த எண்ணிக்கை 3.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
எனினும் இவ்வாறு வேறு நாடுகளிடம் கடன்களை பெற்றுக்கொண்டு எமது கையிருப்பை தக்கவைக்க முடியாது. பெற்றுக்கொண்ட கடன்களை வட்டியுடன் மீளவும் செலுத்த வேண்டும். ஆகவே கடன்களில் வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க நினைப்பது பாதகமான செயற்பாடாகும்.
இதன்போது குறுகியகால சவால்களை எவ்வாறு கையாளப்போகின்றோம். நீண்டகால கடன் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுக்க போகின்றோம் என்பன பாரதூரமான பிரச்சினையாகும். அடுத்த வருடத்தில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது.
இவற்றில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்குகின்றன. எனவே இவற்றை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதையோ அல்லது வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள்வதையோ சிந்திக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுத்தாலும் அவற்றை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.