தமிழ் கட்சிகளின் முயற்சிகளுக்கு பின்னால் சர்வதேச நிகழ்ச்சி நிரல் -
28 Dec,2021
ஸ்ரீலங்காவில் மீண்டும் 13ஆவது திருத்தம் குறித்தும், இந்தியாவின் அழுத்தம் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதுடன், இது குறித்து சிறுபான்மை கட்சிகளின் சில முயற்சிகளும் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் வலுப்பெற சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலே காரணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகார பகிர்வு மற்றும் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கொழும்பு ஊடகத்திடம் தெரிவித்தபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு சகல விதத்திலும் பலவீனமடைந்து சென்றுகொண்டுள்ள நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தை நாடவோ அல்லது வெவ்வேறு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவோ வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சிகளின்போதும் நாட்டின் பலவீனத்தை கருத்தில் கொண்டு தத்தமது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும் சர்வதேச சக்திகள் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக 13ஆம் திருத்தம் என்ற கதைகள் மீண்டும் பொது விவாதத்திற்கு வருவதாகவும், மனோ கணேசன், ரவூப் ஹகீம் போன்றவர்கள் ஒன்றிணைந்து 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரலே இருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வெவ்வேறு நாடுகளும் தமது அரசியல் பொதியை முன்வைக்க நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை முன்வைப்பதாகவும், மனித உரிமைகள் பேரவை சில நிபந்தனைகளை முன்வைப்பதாகவும், இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது நிதியை பெற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பலவீனமான நிலையில் இருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தங்கள் என்றே தாம் கருதுவதாக ஸ்ரீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.