கொழும்பிலிருந்து யாழ் சென்ற சொகுசு பஸ் விபத்து : இளைஞன் பலி, 8 பேர் காயம்
10 Dec,2021
அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் தனியார் சொகுசு பஸ் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் மதவாச்சி பொலிஸ் பிரிவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த சொகுசு பஸ் யாழ் – கண்டி வீதியில் மதவாச்சி – இகிரிகொல்லேவ பிரதேசத்திலேயே விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகியமையே விபத்திற்கான காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது 46 பயணிகள் பேரூந்தில் பயணித்துள்ளனர். இவர்களில் 8 பேர் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஆவார்.
இவர் சாரதியின் இருக்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து வந்ததன் காரணமாக குறித்த இளைஞன் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு , மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.