விடுதலைப்புகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் கருத்து பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நாடாளுமன்ற அலுவலின்போது அவர் இப்படி பேசியதற்கு, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
என்ன நடந்தது?
இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், 2009ஆம் ஆண்டு விடுதலைப்புகளுடனான அந்நாட்டு ராணுவத்தின் யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால், எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பியிருந்தார்.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களில் கஞ்சா பயன்பாடு இருந்ததா? யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போலீஸ், ராணுவம், கடற்படை, விமானப்படை என படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு போதைப்பொருள் பயன்பாடு எவ்வாறு அதிகரித்தது என்றும் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலக் கட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு இருக்கவில்லை என தெரிவித்த அவர், போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை அந்த கால பகுதியில் கண்டுள்ளீர்களா என்றும் கேட்டார்.
எஸ்.ஸ்ரீதரனின் கேள்விகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளித்தார். அப்போது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார்,” என்று கூறினார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஸ்ரீதரன், “போலி தகவல்களை அவையில் தெரிவிக்க வேண்டாம்,” என குறிப்பிட்டார்.
“தமிழர்கள் போற்றும் ஒரு தலைவனை பற்றி அரசாங்கத்தின் கைக்கூலிகள் பேச அருகதை அற்றவர்கள்,” என ஸ்ரீதரன் பேசினார். இந்த தகவலை பின்னர் தமது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்துக்குப் பிறகு செல்வராசா கஜேந்திரன் அவையில் பேசியதும் அங்கு கூச்சல் நிலவியது.
டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கருத்து, முற்றிலும் பொய்யானது என கஜேந்திரன் தெரிவித்தார்.
”நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஒரு துணை ராணுவ குழுவினுடைய தலைவரும், இந்த அவையிலே அமைச்சராகவும் இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கே ஒரு பொய்யான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
அதாவது எங்களுடைய தேசத்தின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுடைய காலத்திலேயே போதைப்பொருள் வியாபாரம் நடந்ததாக அப்பட்டமான பொய்யை அவர் அங்கே குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்தை நான் மிக வன்மையாக கண்டிக்கின்றேன். அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்” என செல்வராசா கஜேந்திரன் கூறினார்.
இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சருமான சீதா அரம்பல, செல்வராசா கஜேந்திரனின் பேச்சுக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.
பிரபாகரன் பெயரை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு
உயரிய சபையில் ‘இந்த நாட்டின் தேசிய தலைவர்’ என்ற விதத்தில் பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஒருவரின் பெயரை செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். உயரிய சபையில் பயங்கரவாத குழு தலைவர் ஒருவரின் பெயரை தேசிய தலைவர் என குறிப்பிட்டு வெளியிட்ட கருத்துகளை அன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டும் என்று சீதா அரம்பல வலியுறுத்தினார்.
அப்போது அவையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வழிநடத்திக் கொண்டிருந்தார்.
இதையடுத்து சீதா அரம்பலவுக்கு பதிலளித்த வேலுகுமார், “நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து சுதந்திரம் அது. கருத்து சுதந்திரத்திற்கு தடங்கலை ஏற்படுத்த என்னால் முடியாது,” என்று கூறினார்.
“இந்த விவகாரத்தில் ஏதேனும் கோரிக்கை இருக்குமானால், அதை சபாநாயகரிடம் முன்வைக்கிறேன்,” என்று வேலுகுமார் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், “செல்வராசா கஜேந்திரனால் வெளியிடப்பட்ட கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க அவையை வழிநடத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கே அதிகாரம் உள்ளது. எனவே, அதற்கு சபாநாயகர் தேவையில்லை,” என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் தனக்கு சபாநாயகருக்கு முன்வைக்கும் அதிகாரம் மாத்திரமே உள்ளதாக வேலுகுமார் மீண்டும் கூறினார்.
இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
தமிழ் உறுப்பினர்கள் நிலைப்பாடு என்ன?
இந்த விடயம் தொடர்பில், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு சென்றீர்களா என்று என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரிடம் பிபிசி தமிழ் வினவியது.
அதற்கு அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் ஊடாக அந்த தகவல், சபாநாயகரை சென்றடையும் என அவர் பதிலளித்தார்.
மாவீரர் நினைவு தின கட்டுப்பாடுகள்
மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் கட்சிகள் தற்போது முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், அதற்கு தடைவிதிக்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள பல நீதிமன்றங்கள், மாவீரர் நினைவு தினத்தை நடத்துவதற்கு தடை விதித்துள்ளன.
அத்துடன், மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் தமிழர்கள் தற்போது முன்னெடுத்து வருகின்ற நிலையில், பாதுகாப்பு பிரிவினர் அதற்கும் தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாவீரர் துயிலும் இல்லத்தை அண்மித்த பகுதிகளை துப்பரவு செய்யும் போது, அங்கு போலீஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அத்துடன், வடக்கில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மாவீரர் தினத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமானால், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, வீடுகளில் மாத்திரம் தமது நினைவேந்தல்களை அனுஷ்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றார்.
“இந்த விவகாரத்தில் , பாதுகாப்பு தரப்பு தடை விதிக்குமானால், அதனை மீறி, தாம் மாவீரர் தினத்தை நடத்துவோம்,”என்று செல்வராசா கஜேந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அமைச்சர் பதில்
யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை அவர்களது உறவினர்கள் நினைவுகூர்வதையும், அதற்கான பிரார்த்தனைகளை உறவினர்கள் செய்வதையும் அரசியல் மயப்படுத்துவதே பிரச்னை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.