பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31 காயங்கள்!
22 Nov,2021
ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விதுசன் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
விதுஷனின் மர்மமான உயிரிழப்பு தொடர்பாக குடும்ப உறவினர்களினால் பல சந்தேகங்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் விதுசனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் முன்பாக இரண்டாவது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கடந்த ஜூன் 21 நீதிமன்ற உத்தரவின் கீழ் தோண்டி எடுக்கப்பட்டு விசாரனைகள் ஆரம்பமானது.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது விதுஷனின் உடலில் 31 வகையான காயங்கள் இருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் கொலைக்கு நீதி வேண்டும் என்றும் தனது மகனை கைது செய்த பொலிஸ் அதிகாரி ஒன்பது கொலைகளை செய்திருக்கின்றேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்து வருவதாகவும் இவருக்கான சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 15 திகதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் 2ம் உடற்கூற்று பரிசோதனையை விரைவாக மன்றுக்கு சமர்பிக்கும்படி பொலிஸாருக்கு நீதவான் உத்தவிட்டுள்ளார்.