இலங்கையை அச்சுறுத்து சீரற்ற வானிலை - மண்சரிவினால் 4 பேர்
09 Nov,2021
- இலங்கையில் மண்சரிவு - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
கேகாலை, ரம்புக்கனை – தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரோ இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்மேடு ஒன்று சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த குறித்த நால்வரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்சரிவில் சிக்கிய வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் கடுமையான மழை பெய்துவருவதால், பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் ஆயிரத்து 143 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளடன் 635 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
5 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இனிவரும் தினங்களில் ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்க முடியும். இது 24 மணி நேரமும் செயற்படுவதாக பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.