கோட்டாபய தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்
27 Oct,2021
எவ்வாறு யுத்தத்தை வென்றாரோ அவ்வாறு பொருளாதாரத்தையும் ஜனாதிபதி வெல்லுவார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன்.
சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றைப் பயன்படுத்திக்கொண்டார். மக்களுக்கு கொஞ்ச கொஞ்சக் காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜானா காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதிபணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழு நாட்டுக்குமான பிரச்சினை.
தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பானது தற்காலிகமானது. ஜனாதிபதி எவ்வாறு இந்த நாட்டிலிருந்த வன்முறைக்குத் தீர்வுகண்டாரோ, இந்த நாட்டில் ஏற்பட்ட கொவிட் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
லொகான் சில்வாவின் நடவடிக்கையானது அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல அது ஒரு தனிப்பட்ட அவருடைய நடவடிக்கை இது சம்பந்தமாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.