கோட்டாபயவிற்கு எதிராக பாரிய எதிர்ப்பலை - தமிழர்கள் எடுத்துள்ள நடவடிக்கை
26 Oct,2021
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரித்தானியாவிற்கான விஜயத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ( P. Thankaraj)அழைப்பு விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்ச, இம்மாத இறுதியில் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள காலநிலை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
குறிப்பாக சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்ட தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், அவரின் விஜயத்திற்கு எதிராக எதிர்வரும் முதலாம் திகதி கிளாஸ்கோ நகரில் புலம் பெயர் தமிழர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்குமாறு புலம் பெயர் தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக லண்டனில் இருந்து சிறப்புப் பேருந்துகளில் சென்று ஆர்ப்பாட்டங்களை நடத்த தமிழ் மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக தலைவர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கும் நோக்கில் காணொளி பதிவுகளை வெளியிட்டு அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரி வருகின்றனர்.