ஐரோப்பாவின் 226 பயணிகளை ஏற்றிய விமானமொன்று கட்டணம் செலுத்துவதில் ஏற்படுத்திய தாமதம் காரணமாக உருவான பிரச்சினையை அடிப்படையாக வைத்து, சர்வதேசத்தில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 26 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Condor Air விமான சேவைக்கு சொந்தமான Boeing 867 ரக விமானமொன்று ஜெர்மனியின் Frankfurt-இல் இருந்து மாலைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
சீரற்ற வானிலை காரணமாக விமானத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது விமானத்தில் 226 பயணிகள் இருந்துள்ளனர்.
அன்றைய தினம் முற்பகல் 11.26-க்கு தரையிறக்கப்பட்ட விமானம் பல மணித்தியாலங்கள் நாட்டில் இருந்துள்ளதுடன், அவசர தரையிறக்கத்திற்கான கட்டணத்தை செலுத்தும் போது கடனட்டை செயற்படாமையினால் விமானிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
740 அமெரிக்க டொலர்களை கடனட்டை மூலம் செலுத்துவதற்கு விமானிகள் முயன்ற போது, அவர்களின் கடனட்டைகள் செயற்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவன நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.
பின்னர், பெண் விமானி உள்ளிட்ட 2 விமானிகளும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 2 இடங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் கடனட்டை செயற்படவில்லை.
குறித்த கடனட்டைகள் சர்வதேச கட்டணங்களை செலுத்தும் வகையில் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதை 45 நிமிடங்களின் பின்னரே அந்த விமானிகள் அறிந்துகொண்டுள்ளனர். அதன் பின்னரே அவர்கள் தமது வங்கிக்கு தொடர்புகொண்டு கடனட்டைகளை சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்றவாறு செயற்படுத்திக்கொண்டுள்ளனர்.
கட்டணங்களை செலுத்தியதன் பின்னர் பிற்பகல் 2.10 அளவில் அவர்கள் விமானத்திற்கு திரும்பியுள்ளனர். விமானம் பயணத்தை ஆரம்பிக்க 15 நிமிடங்கள் இருந்த நிலையில், அவர்கள் விமானத்திற்கு சென்றுள்ளனர்.
விமான ஊழியர்கள் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்காக செல்லும் நேரம் நெருங்கியமையால், அருகிலுள்ள வேறு நாடொன்றின் விமான ஊழியர்களை அழைத்து, பயணத்தை ஆரம்பிக்க நேர்ந்தது.
என்ன நடைபெறுகிறது என்பதை அறியாமல் விமானத்தினுள் பெண்களும், பிள்ளைகளும் அடங்கலாக பயணிகள் பலரும் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிகமாக இலங்கை விமான நிலையத்தில் தங்கி இருந்தமையால், தாமத கட்டணமாக 74 டொலர்களை மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலைமை விமானிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று பல தினங்கள் கடந்துள்ள போதும், அது குறித்து Condor Air நிறுவனம் இலங்கையிடம் எதனையும் வினவவில்லை என ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.
எனினும், இலங்கை விமான நிலையம் Condor Air நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி விடயத்தை தௌிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விமான சேவையொன்று இலங்கையின் பிரதான விமான நிலையத்தில் எதிர்கொண்ட இந்த சம்பவத்தை சாதாரணமாக கருத முடியாதென அனுபவமுள்ள பிரதான சுற்றுலா செயற்பாட்டாளர் கலாநிதி அருண அபேகுணவர்தன தெரிவித்தார்