சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை நேற்று அச்சிட்ட இலங்கை மத்திய வங்கி
17 Oct,2021
இலங்கை மத்திய வங்கி கடதாசிகளை அச்சிடும் இயந்திரமாக மாறியுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன்(Keerthi Tennakoon) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஒக்டோபர் 15 ஆம் திகதி அதாவது நேற்றைய தினத்தில் மாத்திரம் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. சரியாக கூறுவதென்றால், 19.63 பில்லியன் ரூபாய். ஆயிரத்து 963 கோடி ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் எதனை கூறினாலும் நாட்டில் பொருட்களின் விலைகள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளமை இந்த பணம் அச்சிட்டமைக்கான காரணம். 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்காக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 768 கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.
இது 1950 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 2020 ஜனவரி முதலாம் திகதி வரையான 70 ஆண்டு காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தை விட 20 மடங்கு அதிகம். கடந்த 20 மாதங்களில் மாத்திரம் இந்தளவுக்கு பணத்தை அச்சிட்டது எனக் கூறுவது ஆச்சரியமானது.
இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 74.74 பில்லியன் ரூபாய் அதாவது 7 ஆயிரத்து 474 கோடி ரூபாய் பணத்தை மாத்திரமே அச்சிட்டிருந்தது.
அஜித் நிவாட் கப்ரால்(Ajith Nivard Capral) மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர் இதுவரை 17 ஆயிரத்து 804 கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.
கடந்த 20 மாதங்களில் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு தொடர்ந்தும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளளதுடன் வறிய மற்றும் மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் மீது, சீனி, கோதுமை மா போன்ற அத்தியசிய பொருட்கள் மூலம் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருக்கும் அந்நிய செலாவணி கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்தது.
இலங்கையின் வங்கி கட்டமைப்பை தாண்டி, உண்டியல் முறை மூலம் டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படும் கறுப்புடை நிதி வர்த்தகம் விரிவடைந்துள்ளது” எனவும் கீர்த்தி தென்னகோன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.