காணாமல்போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸிடம் தெரிவிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பி முன்னோக்கி பயணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உச்சபட்ச ஒத்துழைப்பு மிகவும் சாதகமாக இலங்கைக்கு வழங்கப்படும் என்று அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதியை வரவேற்ற பொதுச் செயலாளர் , 1978 ஆம் ஆண்டில் உள்நாட்டு பாராளுமன்ற சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த நான் , கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நினைவு கூர்ந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஆணையாளராக இலங்கை தொடர்பில் சேவையாற்றியமை மற்றும் 2006 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த சந்தர்ப்பம் தொடர்பிலும் பொது செயலாளர் குட்டரேஸ் இதன் போது நினைவுபடுத்தினார்.
30 ஆண்டு காலம் நிலவிய மோதல் நிலைமை காரணமாக மிகவும் சிக்கலான நிலைமைக்கு செல்ல வேண்டியேற்பட்டாலும் , இந்து சமுத்திர வலயத்தின் பாரிய சமூக மற்றும் பொருளாதார பணியை ஆற்றும் இலங்கையிடம் எதிர்காலத்திலும் அதனை எதிர்பார்ப்பதாக இதன் போது பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் செயலாளருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவித்த ஜனாதிபதி , முழு உலகும் எதிர்கொண்டுள்ள மிக சிக்கலான இந்த கால கட்டத்தில் ஐ.நா. சபையினை இயக்குதல் மற்றும் இரண்டாவது முறையாகவும் பொதுச் செயலாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
சிறு பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடுகள் கொவிட் தொற்றுக்கு மத்தியில் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெளிவுபடுத்தினார்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால் தொடர்பில் நீண்ட நேரம் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, உலக சுகாதார ஸ்தாபனம் தொற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் ஜனநாயகத்தை பலமாக ஸ்தாபிப்பது தனது இலக்காகும் என்றும் , அதற்கமைய ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றினை தடுக்கும் வகையில் எந்த சந்தர்ப்பத்திலும் கண்ணீர் புகைப்பிரயோகம் கூட முன்னெடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார். அத்தோடு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னர் இடமொன்றை ஒதுக்கி கொடுத்திருப்பதையும் ஜனாதிபதி இதன் போது தெரியப்படுத்தினார்.
இதேவேளை, உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிவில் சமூக அமைப்புகளுடன் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி இதன் போது விளக்கினார். இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை உள்ளக மட்டத்திலேயே பேசி தீர்க்க வேண்டும். எனவே புலம்பெயர் தமிழர்களுக்கு இதற்காக அழைப்பு விடுப்பதாகவும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, நம்பவர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அதே போன்று நிறைவேற்றுவதற்கு கொவிட் தொற்று பாரிய பாதிப்பாக அமைந்ததாக இதன் போது ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த நிலைமைக்கு மத்தியில் 30 வருடங்களுக்கும் அதிக காலமாக நிலவிய தீவிரவாதத்தை தோற்கடித்த பின்னர் ஏற்பட்ட விளைவுகளை தீர்த்துக் கொள்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி தெளிவாக விளக்கினார்.
அத்துடன் காணாமல்போன நபர்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வெகுவிரைவில் முன்னெடுப்பதாகவும் , மரண சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் துரித நடவடிக்கைளை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா.பொதுச் செயலாளரிடம் தெரிவிவித்துள்ளார்.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் எனவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் மீண்டுமொருமுறை பிரிவினைவாதம் உருவாக மாட்டாது என்று உறுதியளிக்க முடியும். மத அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையைப் போன்றே ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஐ.நா. செயலாளருடனான சந்திப்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ச்சியாக மிகவும் நெருக்கமாக செயற்படுவதற்கு தயார் என்று தெரிவித்த ஜனாதிபதி , மீண்டுமொருமுறை பிரிவினைவாதம் இலங்கையில் ஏற்பட மாட்டாது என்று உறுதியளிக்க முடியும் என்றும் , மத அடிப்படைவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையைப் போன்றே ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.