ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர், இலங்கை தொடர்பில் கடந்த 13ஆம் தேதி சமர்ப்பித்த வாய்மொழி மூல சமர்ப்பணத்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்தமை தொடர்பில் பிபிசி தமிழ் அவரிடம் கருத்து கேட்டபோது பேசிய அவர், மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.
மேலும், ஆணையரின் வாழ்மொழி மூல அறிக்கையை இலங்கை நிராகரித்தமை ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்றும், அது எதிர்பார்க்கப்பட்டதுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர் சுயாதீனமாக கண்காணித்து அதன் அடிப்படையில்தான் தனது அறிக்கைகளை தயாரிப்பார். எனவே, மனித உரிமை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரத்து விட்டது என்பதற்காக, அவர்களின் நிராகரிப்பு நம்பகத்தன்மையுடையதாக மாறி விடப்போவதில்லை,” என்றும் அம்பிகா சற்குணநாதன் கூறினார்..
“மனித உரிமைகள் பேரவையின் 46/1 பிரேரணையின் கீழ், ஆதாரங்களைத் திரட்டுவதற்கானதொரு பொறிமுறையை ஆணையரின் அலுவலத்தினுள்ளேயே தாபித்துள்ளார்கள். அது தற்போது செயற்படத் தொடங்கி விட்டதாகவும் ஆணையர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்த வகையில், அந்த பொறிமுறையினூடாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். எனவே, இலங்கையின் நிராகரிப்பானது, அந்த நடைமுறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சர்வதேச பொறிமுறையினூடாகவோ, சர்வதேச சமூகத்தினூடாகவோ ஒரு மாயாஜாலம் போல் உடனடியாகத் தீர்வு கிடைத்து விடாது எனக் குறிப்பிட்ட அம்பிகா, “வரலாறுகளைப் பார்க்கும் போது, ஒருபோதும் உடனடித் தீர்வுகள் கிடைத்ததில்லை” என்றார்.
உதாரணமாக சூடான், பலஸ்தீன் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறல் விவகாரங்களில், சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், அதுதான் யதார்த்தமாகும் எனவும் அம்பிகா சற்குணநாதன் பிபிசி தமிழிடம் கூறினார்.
“பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வு தேவையென்றால், அதற்காக உள்ள பொறிமுறை மற்றும் பூகோள அரசியலை எவ்வாறு பயன்படுத்தி அவற்றினூடாக அழுத்தங்களை வழங்கலாம் எனப் புரிந்து கொண்டு, அதற்கான தயார்படுத்தல்களைச் நாம் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்ட அவர்; “வெறுமனே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது” என்றார்.
“சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் – சில வகையான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, உலகிலுள்ள எந்தவொரு நாடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஈரானில் 1988ஆம் ஆண்டு, ஒருவர் அரசியல் கைதிகளைச் சித்ரவதை செய்து கொலை செய்தார். அவர் 2019ஆம் ஆண்டு சுவீடனுக்குச் சென்றபோது அவருக்கு எதிரான ஆதாரங்களையெல்லாம் திரட்டி, சுவீடன் அவரைக் கைது செய்தது. இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம், அவருக்கெதிரான வழக்கு துவங்கியது”.
“இதேபோன்று இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக, சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்பொருட்டு குற்றம் நடைபெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டி, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் – வேறு நாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள மனித உரிமைகள் அமைப்புகளுடனுடம், நாடுகளுடனும் இணைந்து வேலை செய்து, சர்வதேச நியாயாதிக்கத்தைப் பயன்படுத்த வேண்டும்” என, முன்னாள் ஆணையாளர் கூறினார்.
மேலும் இலங்கையை குற்றவியல் நீதிமன்றுக்குக் கொண்டு செல்வதென்றால், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“பாலத்தீனத்தில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்களை விசாரணை செய்வதற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில்தான் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக பலஸ்தீன மக்கள் சர்வதேச ரீதியில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்” எனக் கூறிய அவர்; “நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக சிவில் சமூகங்கள் உழைக்க வேண்டும்” என்றார்.
“தற்போது இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையில் எடுத்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் ஆணையர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார். அதேவேளை அவர்களின் பொறிமுறையும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும்”.
“இருந்தபோதும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சர்வதேச மட்டத்தில் நீதி கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவ்வாறு கிடைக்கும் என்று அரசியல்வாதிகள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்”.
“உள்நாட்டு சிவில் சமூகங்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு, சர்வதேசத்துடன் இணைந்து செயற்படாது விட்டால், சர்வதேசம் தனியாகச் செயற்பட்டு தீர்வினைப் பெற்றுக் கொண்டுக்கும் வழிமுறைகள் குறைவாகவே உள்ளன,” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஐ.நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையினூடாக இலங்கை விவகாரத்தில் ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் போது, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்து விடக்கூடிய சாத்தியங்களும் உள்ளன”.
“இலங்கைப் பிரச்சினை தொடர்பில் சர்வதேச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருமளவு நிதி தேவைப்படும். அந்த நிதியைப் பெற்றுக் கொள்வதிலும் பிரச்னைகள் உள்ளன. தற்போதை உலகளாவிய பெருந்தொற்று நிலை, அதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகள், யுத்தம், காலநிலைப் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உள்ள நிலையில், இதற்கான போதிய நிதியை உலக நாடுகள் வழங்குமா என்கிற கேள்விகளும் உள்ளன” என்றும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, நிச்சயமாக அதனை சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வியடைச் செய்யும். சூடான் விவகாரத்தில் தீர்மானங்களை – பல தடவை பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர்தான் பலன் கிடைத்தது. எனவே, இலங்கை விவகாரத்தையும் திரும்பத் திரும்பக் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருக்கும் என்றும் அவர் கூறினார்.
நிலைமை இப்படியிருக்க சிலர் யதார்த்தத்துக்கு மாறான தகவல்களை மக்களுக்கு வழங்கி, உண்மையான நிலைவரத்தைக் கூறாமல் இன்று அல்லது நாளை சர்வதேசத்திடமிருந்து தீர்வைப் பெற்று விடலாம் என்பது போல் கூறிவருகின்றனர் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.