இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பது மற்றுமொரு கொத்தணிக்கு வழிவகுக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ
02 Sep,2021
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் இலங்கையிலும் பரவலாம் என சுகாதார தரப்பினர் எதிர்வு கூறியுள்ள நிலையில் இந்திய சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணி கேள்வியெழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துவரும் நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு புதியதொரு கொத்தணியை உருவாக வழிவகுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த ஒன்றரை வருடகாலமாக முன்னெடுத்த செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றின் முதலாவது அலையை கட்டுப்படுத்திய பின்னர் உக்ரைன் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட பின்னர் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தமையையும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.