நாட்டில் மேலும் 192 கொவிட் மரணங்கள் பதிவு : 60 வயதிற்கு மேற்பட்டோர் 156 பேர்
29 Aug,2021
நாட்டில் நேற்று (28.8.2021) கொரோனா தொற்றால் மேலும் 192 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 25 ஆண்களும், 11 பெண்களுமாக 36 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84 ஆண்களும் 72 பெண்களுமாக 156 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,775 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்றையதினம் 4612 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 426 169 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 357 598 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 59 796 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கடந்த 7 நாட்களில் ஒரு இலட்சம் சனத்தொகையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.
அந்த குழுவின் மதிப்பீட்டுக்கமைய டெல்டா தொற்று வேகமாக பரவியமையே இந்த நிலைமைக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது சிவப்பு அபாய நிலைமை காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொவிட் தொற்றுக்குள்ளான 186 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு , நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளான 4,347 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.