'நல்லாட்சி தொடரட்டும்' இலங்கையில் இருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்துச் செய்தி
28 Aug,2021
தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் ஏதிலிகள் தொடர்பான நலத்திட்டங்களை ஆரம்பித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக தமிழ்நாட்டில், அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கான நிரந்த வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், ஈழத் தமிழ் உறவுகளின் புதிய சந்ததிகளின் உயர்கல்விக்கான உதவித் திட்டம் மற்றும் இலங்கையில் மீள குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை தமிழக முதல்வர் எடுத்தமை மகிழ்ச்சியளிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்ததோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி ஆக்கபூர்வமான செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு தமிழ் மக்கள் சார்பாக உளம் கனிந்த நன்றியையும், தங்களது நல்லாட்சி தொடர்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வம் அடைக்கலநாதன் அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.