கடும் தொனியில் ராஜபக்சர்களுக்கு வந்த எச்சரிக்கை
12 Aug,2021
இலங்கை மக்கள் ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதால், அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, தென்னிலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களில் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அபயராமை விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் எனவும் எச்சரித்துள்ளார்.
பௌத்த தர்மத்தின் போதனையில் ஒரு விடயம் உள்ளது "நீ செய்து கொண்டதை நீயே அனுபவி" என்று சொல்லப்படுகின்றது, இன்று எமக்கும் அந்த நிலைமை தான் வந்துள்ளது. வேறு ஒன்றும் இல்லை.
மஹிந்த ராஜபக்சவுக்கு என்ன சொன்னோம், மக்களின் அபிமானம் வென்ற முப்படைகளின் தளபதி எனப் போற்றப்பட்டார், ஆனால் மஹிந்த ராஜபக்ச அவர்களே இன்னும் சில நாட்களில் நீங்கள் மக்கள் மனங்களில் இருந்து முற்றாக அகற்றப்படுவீர்கள். நீங்கள் இப்படியே இருந்தால் அது நிச்சயம் நடக்கும். நீங்கள் மட்டும் அல்ல எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்காலமே இல்லாமல் போகும் ஒரு நிலை வரும் என்பது எமக்கு நன்றாக தெரிகிறது.
எங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கையாக மக்களையும் இணைத்து கொண்டு இப்பொழுது பொறுத்தது போதும் என, இனியும் பார்த்துக்கொண்டு இருக்காமல் நாட்டிற்கு உகந்த மக்களுக்கான திட்டங்களை ஆரம்பிக்க உள்ளோம்.
விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டை முடக்க சொல்கின்றர்கள். நாங்களும் அதையே தான் சொல்கின்றோம், நாட்டை மூடுங்கள், நாட்டு மக்களுக்கு உணவை கொடுத்து, தடுப்பூசிகளை சரியாக வழங்கி இந்த நாட்டை வழிநடத்த முடியும் அனால் அது எதனையும் இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டு தான் வேலை செய்கின்றார்கள். இதனால் இந்த நாட்டில் அனைவரும் தற்பொழுது வெறுப்படைந்துள்ளார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.