கொள்ளளவை விடவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளமையால், கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகள் பலவற்றில், நடைபாதைகளில் பாய்களைப் போட்டு, படுத்து தூங்கிக்கொண்டிருகின்றனர்.
இது தொடர்பில் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. இது, பேரபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியசாலைகள் பலவற்றில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்கும் விடுதிகள் மட்டுமன்றி, அவசர சிகிச்சைப் பிரிவு விடுதி கட்டில்களும் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன என்றும், அவசர நிலைமை பிரகடனப்படுத்தியிருக்கும் வைத்தியசாலைகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இராகமையில் உள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், கொரோனாத் தொற்றாளர்கள் நடைபாதையில், பாய்களைப் போட்டு படுத்து உறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.
நாளாந்தம் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையால் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என அந்த வைத்தியசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுள்ள நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன. போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நான்கு கட்டில்கள் மட்டுமே உள்ளன. அந்த நான்கு கட்டில்களும் கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சில வைத்தியசாலைகளில் அந்த நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளன.
பதுளை வைத்தியசாலையிலும் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சகல அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஆகக்கூடுதலான கொள்ளளவுக்கு அண்மித்துள்ளது.
ஆகையால், கொழும்புக்கு வெளியே கொரோனா மத்திய நிலையங்களாக இருக்கும் மத்திய நிலையங்களின் புகுமுகக்கூடத்தில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகின்றன. “தற்போது இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள்களின் எண்ணிக்கையைப் போல, இன்னும் நான்கு அல்லது ஐந்து மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர்” என ரவி குமுதேஷ் தலைமையிலான துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை கொவிட் நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான நடவடிக்கைளை எடுக்கவேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிலைமையை அடிப்படையாக வைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை அல்லது முடக்கல்நிலைமையை அறிவிப்பது குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
காலத்திற்கு காலம் நிலைமையை ஆராய்ந்து சுகாதார அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக பொருளாதார விடயங்களில் சமநிலையை பேணும்அதேவேளை நாங்கள் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவேண்டும் அல்லது நாட்டை முடக்கவேண்டும் என அதிகாரிகள் தீர்மானித்தால் தயக்கமின்றி பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.