டயகம சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலான 8 பக்கங்களை கொண்ட அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்து, விடயங்களை தெளிவூட்டிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், சிறுமி தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உண்மையை மறைப்பதற்காக, பெண் சந்தேகநபரின் தந்தை செயற்பட்டுள்ளமை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது, சிறுமியின் பெயரை ‘ஹிஷானி” என்ற சிங்கள பெயரை வழங்கியுள்ளதுடன், அவரது வயதாக 18 வயதை கூறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
சிறுமி உயிரிழந்ததன் பின்னர், பொலிஸ் ஆடையை ஒத்ததான ஆடையை அணிந்த நபர் ஒருவர், உயிரிழந்த சிறுமியின் சகோதரனை சந்தித்து, “இந்த விடயத்தை நீண்ட தூரம் கொண்டு வேண்டிய அவசியம் இல்லை. பொலிஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை” என அழுத்தங்களை விடுத்துள்ளதுடன், 50,000 ரூபா பணத்தையும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்பின்னர், இறுதிக் கிரியைகளுக்காக மேலும் 50,000 ரூபா பணத்தை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 8 சீ.சீ.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் 6 கமராக்கள் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அழைத்து வந்த ஏனைய சிறுமிகள் எங்கு இருக்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயிரிழந்த 16 வயது ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இவர்களில் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கடமையாற்றிய 22 வயது யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..