பொதுத் தலைவராகிறார் ரணில் ? ; சம்பந்தன், ஹக்கீம், மனோ, அநுரவுடன் முக்கிய கலந்துரையாடல்
23 Jul,2021
பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க உள்ளார்.
இதன் முதற்கட்ட கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கலந்துரையாடல் அடுத்த வாரம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் ஜனாநாயக விழுமியங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் பொது நிகழ்ச்சி நிரல் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இதனை மையப்படுத்தி பாராளுமன்றத்தை பிரதிநிதித்தும் செய்யும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடப்படும்.
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட நெருக்கடிகளில் பொது நிகழ்ச்சி நிரலுக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆளும் கட்சியின் கிராமிய மட்டத்திலான தலைவர்கள் அரசாங்கம் மீது கடந்த காலங்களில் விரக்தி நிலையை கொண்டிருந்தனர். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரனை வெற்றிக்கொள்ளப்பட்ட பின்னர் அந்த நிலைமை மாறியுள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எமக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க , மறுப்புறம் பல துறைகளிலும் வீழ்ச்சியை கொண்டிருந்த அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் அதிகாரம் உள்ளதாக வாக்கெடுப்பு முடிவுகள் எண்ணவும் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியமும் இங்கு உள்ளது.
இதனடிப்படையில் பொது தலைமைத்துவம் ஒன்றின் கீழ் பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் செயற்படுவது குறித்து உத்தேச சந்திப்புகளில் கலந்துரையாடப்பட உள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடலை அடுத்த வாரம் முன்னெடுக்கப்படும்.
அதனை தொடர்ந்தும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பலருடனும் இந்த கலந்துரையாடல் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.