15 வயதிலேயே கொழும்புக்கு வந்த சிறுமி ரிஷாத் வீட்டில் மரணம்
18 Jul,2021
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பொரளையில் உள்ள வீட்டில் பணிபுரிந்த சிறுமி, தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிறுமிக்கு 15 வயதாக இருக்கும் போதே வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை அடிப்படையாக வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தலவாக்கலை – தயாகம தோட்டத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, ஜூலை 3 ம் திகதி எரி காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 15 ஆம் திகதி உயிரிழந்தார்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் குறித்த சிறுமிக்கு 15 வயதாக இருக்கும் போது, வீட்டு பணிப் பெண்ணாக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பே முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், பொரளை பொலிஸார் மற்றும் கொழும்பு (தெற்கு) பிரதேச குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
முன்னதாக உயிரிழந்த சிறுமியின் தாயிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் மற்றொரு அறிக்கையை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்