இந்தியாவில் இருந்து இலங்கை வருபவர்கள் குறித்து விடுக்கப்பட்டுள் எச்சரிக்கை
11 Jul,2021
ஸிகா(zika)வைரஸ் இந்தியாவில் பரவியுள்ள நிலையில் அங்கிருந்து இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் இந்த வைரஸ் உள்ளூர் மக்களிடையே பரவ வாய்ப்புகள் உள்ளன என்று கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
ஸிகா வைரஸால் பாதிப்புக்குள்ளான 14 பேரைக் கண்டறிந்த பின்னர், இந்தியாவின் கேரள மாநில சுகாதார அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஸிகா வைரஸ் பகல் வேளைகளில் செயலில் இருக்கும் 'ஏடிஸ் இன நுளம்புகள் மூலம் பரவுகிறது. ஏடிஸ் என்பது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல மண்டலங்களில் வாழும் நுளம்புகளின் ஒரு இனமாகும்.
"ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக லேசான காய்ச்சல், சொறி, வெண்படல, தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக்குறைவு அல்லது தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அறிகுறிகள் இருக்காது என்றும் மருத்துவர் பெரேரா கூறினார்.
இதில் மிக முக்கியமான விடயம், கர்ப்ப காலத்தில் வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதாகும். கர்ப்ப காலத்தில் ஸிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் குழந்தைகள் பிறவி குறைபாடுகளுடன் பிறக்கக்கூடும், இது பிறவி ஸிகா நோய்க்குறி என அழைக்கப்படுகிறது.
இந்த வைரஸ் தொற்று கர்ப்பத்தின் போது வேறு பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். முன்கூட்டிய பிறப்பு மற்றும் கருச்சிதைவு என்பனவும் இதில் அடங்கும் பெரேரா கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களின்படி, உகண்டாவில் முதன்முதலில் 1947 இல் குரங்குகளில் இந்த வைரஸ் காணப்பட்டது. இது பின்னர் 1952 இல் உகண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களில் தொற்றியது.